Kathir News
Begin typing your search above and press return to search.

முழுவதும் கருங்கல்லால் ஆன அதிசய கோவில்!

முழுவதும் கருங்கல்லால் ஆன சிவாலயம் பற்றி காண்போம்.

முழுவதும் கருங்கல்லால் ஆன அதிசய கோவில்!

KarthigaBy : Karthiga

  |  27 April 2024 3:42 PM GMT

முழுவதும் கருங்கல்லால் உருவான சிவாலயமாக அதிசய கோயிலாக மதகடிப்பட்டு குண்டான்குழி மகாதேவர் கோயில் அமைந்திருக்கிறது .கோயிலை கி.பி 985-இல் முதலாம் ராஜராஜசோழன் எழுப்பினான். முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதி ராஜன், இரண்டாம் ராஜேந்திரன் ,வீரராஜன் முதலாம் குலத்துங்கன், விக்ரமசோழன் மூன்றாம் குலோத்துங்கன் என சோழர்களின் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு திருப்பணிகள் கொடைகளை குறிக்கும் வகையில் 63 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.

மூலவர் சிவ, விஷ்ணு ,பிரம்ம பாகம் என்று இல்லாமல் சிவபாகத்தோடு மட்டுமே காட்சி தரும் சிவலிங்க திருமேனி கொண்டது. கருவறை விமானத்தின் தாமரை பீடத்திலேயே சுகாசனமாக சுப்பிரமணியர் அரிதாக காட்சி தரும் தலமாகும். கோயிலின் பெயரிலேயே ஊர் அமைந்த திருத்தலமும் கூட .சிற்பக் கலைக்கும் கட்டிடக்கலைக்கும் தலைசிறந்த கோயில் .தொல்லியல் கோயில் என பல்வேறு பெருமைகளை கொண்டது .இந்த கோயிலின் விமானம் எசாலம் சிவாலயம், விரலூர் பூமீஸ்வரர் காஞ்சிபுரம் கவுசிகேஸ்வரர், அருஞ்சுகை ஈஸ்வரம் ஆகியவற்றை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

குண்டான் குழி என்பதற்கு ஆழமான அழகிய நீர்நிலை என்பது பொருளாகும். மதகடிப்பட்டு என்பது மதகடி பற்று என்ற சொல்லிலிருந்து மருவிய பெயராகும். இதன் பொருள் 'மதகுக்கு அண்மையில் அமைந்த நிலம்' என்பதாகும் .இந்த வளாகத்தில் சிவனுக்கும் அம்மனுக்கும் தனித்தனி சன்னதிகள் கருங்கல் திருப்பணியில் அமைந்திருக்கின்றன. சிவாலயம் மேற்கு வாயை கொண்டுள்ளது .அர்த்தமண்டபம் தூண்கள் எட்டு பட்டை வடிவம் கொண்டதாக விளங்குகின்றது. இறைவனுக்கு திருக்குண்டான்குழி மகாதேவர், பரமசுவாமி உடையார், ஆளுடையார் என பல்வேறு பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சிவனை நோக்கி நந்தி தேவர் காட்சி தருகிறார்.

தெற்கு நோக்கி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் முழுமையாக கருங்கல்லால் அமைந்திருக்கிறது. அன்னை நின்றகோலத்தில் எழிலாக அருள்கிறாள். இதன் எதிரே சப்த மாதர் சன்னதி அமைந்திருக்கின்றது. அதிசய கருங்கல் கோயிலாகவும் கலை பொக்கிஷமாகவும் விளங்கும் இந்த கோயில் புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் வட்டம் மண்ணாடி பட்டு கொம்யூனில் மதகடிப்பட்டு சந்தை பகுதியில் அமைந்திருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் மதகடிப்பட்டு அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News